Wednesday, June 18, 2008

நிலவின் மடியில் நான் நனைந்த இரவுகள்




நிலவின் மடியில் நான் நனைந்த இரவுகள்



தந்தையின் விரல் பிடித்து நடை பழகிய காலம் முதல் நிலவு என் வாழ்க்கையின் ஒரு அங்கமாகத்தான் இருந்திருக்கிறது. கிராமத்து வாழ்க்கையில் நகரத்துக்கு வந்து விட்டு அப்பாவின் சைக்கிளில் ஊர் திரும்புகையில் நிலா எப்படி கூடவே நகர்கிறது என்று அதிசயித்த நாட்கள்.

பள்ளி நாட்களில் இளம் பருவத்தில் மொட்டை மாடி கனவுகளில் லயித்து கவிதை எழுத தூண்டியதும் நிலவுதான். ஆறாம் வகுப்பில் தமிழ் ஆசிரியர் பாராட்டிய முதல் புதுக்கவிதை நிலவை பற்றித்தான்.

இரவுகளில் மொட்டை மாடியில் படிக்கிறேன் பேர்வழி என்று நிலவை பார்த்து கவிதை எழுதிய நாட்கள் சுகம். முதல் காதல் வந்து பினாத்திய நாட்களில் மல்லாந்து படுத்து நிலவோடு பேசிய நிகழ்வுகள் அதிகம்.

கல்லூரி நாட்களில் இரவு இரண்டாவது ஆட்டம் சினிமா பார்த்து விட்டு நடந்து வந்த நாட்களில் சாட்சியான நிலா. அதே இரவில் கல்லூரி நண்பனின் சாலை விபத்து மரணத்துக்கும் சாட்சியானது அதே நிலா தான். வேறொரு இரவில் முதல்வரிடம் வகையாக மாட்டி கொண்டு திட்டு வாங்கியது வேறு கதை. அதையும் மௌனமாய் ரசித்தது நிலவு தான்.

முதுகலை பட்ட படிப்பு விடுதி வாழ்க்கையில் எத்தனையோ மொட்டை மாடி பிறந்த நாள் கொண்டாட்டங்கள், சீனியர்களின் வரவேற்பு விழா கொண்டாட்டங்கள் , அரங்கேறிய நடனங்கள் , விளையாட்டு விழா வெற்றி கொண்டாட்டம் , இரவு தொடங்கி அதிகாலை வரை நீடித்த அரட்டைகள் அத்தனையும் கூட இருந்து ரசித்த நிலவு.

மென்பொருள் துறையில் வேலை கிடைத்ததும் ஊரில் இருந்து பேருந்தில் பயணம் செய்கையில் ஜன்னல் ஓரத்தில் கூடவே வந்த நிலா. விழிகளில் ஈரம் நிலவை பிரிவதை நினைத்தா அல்லது பெற்றோரை பிரிவதை நினைத்தா ?

தனிமை வருத்திய இரவுகளில் துணையாக இருந்த நிலா , அதனால் தானோ என்னவோ என் வாழ்க்கை துணையை முதல் பார்வையிலேயே பிடித்து போனது , அவளது பெயரிலும் நிலவு "வெண்ணிலா".

பேரிடியாய் இறங்கிய தந்தையின் மரணம், தனிமையில் அழுகையில் கூடவே அழுததும் நிலவுதான்.

இன்று என் இளைய நிலவுக்கு சோறு ஊட்ட ஜன்னலில் வருவதும் நிலவுதான்.

என் மகள் " நிலா வா வா " என்று அழைக்கையில் ஓடி வருவதும் அதே நிலவுதான்.

இதுவரை கூடவே வந்த நிலவு இன்னும் என்னோடு வரும் நான் இந்த மண் விட்டு போகும் வரை.
- என் முதல் வலைப்பதிவு
- விவேக்