Tuesday, May 18, 2010

கேள்விகளால் ஒரு உலகம்



நமக்கெல்லாம் யாராவது ஒரு கேள்வி கேட்டாலே நம்மை குற்றம் சொல்கிறார்களோ என்று ஒரு நினைவு மனதுக்குள் ஓடாமல் இல்லை. கேட்கிற கேள்விக்கு பதில் தெரியாவிட்டாலும் எதாவது ஒரு பதிலை சொல்லி சமாளித்த காலங்கள் பல...
கல்லூரியில், நேர்முகத்தேர்வில், மேலாளரிடத்தில், உடன் பணிபுரிபவர்களிடத்தில்.. என்று நீளும் பட்டியல்.

பதில் இல்லை என்றால் ஏன் சும்மா தொனத்தி எடுக்கிறே? என்று ஆரம்பித்து தங்கமணியோடு சண்டையில் போய் முடிந்த தருணங்கள் கணக்கில் அடங்காதவை...

ஆனாலும், கேள்விகளாலேயே ஒரு உலகம் உண்டு!! யாழினியின் உலகம்!!!  
யாழினி என் மூன்றரை வயது குட்டி தேவதை...
என் குட்டி தேவதையின் உலகம் இப்போதெல்லாம் கேள்விகளாலேயே நிரப்பப்பட்டிருக்கிறது.


எனக்கும் அவளுக்கும் நடந்த ஒரு உரையாடல்

நீ நெறைய கீரை சாப்பிடனும், காய் கறி சாப்பிடனும் 
யாழினி: ஏன் ?
அப்போதான் முடி நிறைய வளரும்
யாழினி: வளர்ந்தா? 
பார்க்க அழகா இருப்பிங்க
யாழினி:இருந்தா?
ஹெல்த்தியா இருக்கலாம் 
யாழினி: எதுக்கு?
நல்லா படிக்கலாம்
யாழினி: படிச்சு?

இப்படி வடிவேல் நகைச்சுவை மாதிரி நீண்டு கொண்டே போகும் கேள்விகள். நான் சலித்து போய் பதில் சொல்வதை நிறுத்தினால் ஒழிய அவள் நிறுத்துவதில்லை.. திடீரென்று அவள் பொம்மைகளுக்கு பதிலாய் எனக்கு அறிவுரைகள் திரும்ப வரும். நீ நல்லா கீரை சாப்பிடனும் அப்போதான் முடி வளரும்.. எல்லா காயும் சாப்பிடனும்.. என்று கூறி விட்டு எனக்கு சோறு ஊட்டி விடுவாள். அவளுக்கு தெரியாது என் வழுக்கையில் இனி என்ன கீரை சாப்பிட்டாலும் முடி வளராது என்று.... அவள் கையில் பொம்மையாய் மாறிப்போனதில் நான் என்னுள்ளே தொலைந்து போனேன்.


கேள்விகள் இதோடு நின்று விடுவதில்லை.. பார்ப்பது எல்லாவற்றிக்கும் புதிது புதிதாய் ஒரு கேள்வி தொக்கித்தான் நிற்கிறது. ஆனாலும் பதில் சொல்ல ஏனோ அலுப்பதில்லை!! அவளின் கேள்விகள் இல்லாமல் நாட்கள் நகர்வதில்லை...


 அவளின் கேள்விகளுக்கு விடை தேடுவதில் நான் புதிதாய் கற்று கொள்வது எத்தனையோ!! பொறுமையும் சேர்த்து!!
.

Tuesday, May 4, 2010

புகைப்படங்கள்


எப்போதாவது திருப்பிப்பார்க்கும்
பழைய புகைப்படங்கள்
நினைவு படுத்துவது...

பள்ளி நண்பர்களை
கல்லூரி நண்பர்களை
அலுவலக நண்பர்களை
பக்கத்து வீட்டு நண்பர்களை...

மகிழ்ச்சியான எத்தனையோ பயணங்களை
புகை வண்டியில் கூட பயணித்தவர்களை...

சொல்ல மறந்த
சொல்லாமல் விட்ட காதல்களை
இன்னும் எத்தனையோ நினைவுகளை...

கடைசியில் மிஞ்சி நிற்பது ஒரே ஒரு கேள்விதான்???
இதில் எத்தனை பேர் நம்மோடு தொடர்பில்?

நட்பு எப்போதும் 
புகை வண்டி பயணம் மாதிரி
ஆட்கள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள்
வண்டி மட்டும் 
நிற்காமல் ஓடிக்கொண்டே...