Friday, March 13, 2009

ஆளில்லாத கடையில (ஐ டி கம்பெனி) டீ ஆத்துவது எப்படி ?

ஆளில்லாத கடையில ( டி கம்பெனி) டீ ஆத்துவது எப்படி ?





அமெரிக்காவில பொருளாதார சரிவு அதனால நிறைய மென்பொருள் கம்பெனிகள மூடிட்டாங்க !! ஆட்குறைப்பு நடவடிக்கைகள் !! சிக்கன நடவடிக்கைகள் !! சம்பளம் கட் !! இப்படி எங்க திரும்பினாலும் படுத்தறாங்கப்பா !! முடியல !! இப்பவே கண்ண கட்டுதே!!

இந்த வாரம் என்ன ஆணி புடிங்கினே?? அப்படின்னு நம்ம மேலாளர் கேட்டா? முதல் வாரத்துல புடிங்கின ஆணியவே சொல்ல வேண்டியிருக்கு. அவரும் சளைக்காம அது போன வாரம் நான் கேட்கறது இந்த வாரம் அப்படின்னு வடிவேல் ரேஞ்சுக்கு நம்மள வெச்சு காமெடி பண்றாரு... அவருக்கும் பெருசா புடுங்க தேவையில்லாத ஆணி எதுவும் இல்லைன்னாலும் நம்ம மேல மட்டும் கொல வெறி !!!


சரி என்னதான் நம்ம செக்யுரிட்டி கேட் திறக்கும்போது
ஆபிசுக்கு வந்திட்டு எட்டு மணி நேரம் கழிச்சு போனாலும் சும்மாவே உட்கார்ந்துட்டு என்ன ஆணி புடுங்கறே? அப்படின்னு நம்ம மேலாளர் கேட்கத்தானே செய்வாரு!!!

இதையெல்லாம் சமாளிக்க என்ன செய்யலாம்னு நம்ம ஆபிசுக்கு பக்கத்தில இருக்கற பார்க்குல மல்லாக்க படுத்து வானத்த பார்த்து யோசிச்சதுல சில யோசனைகள் அருவி மாதிரி கொட்டுச்சு. சரி இதை சமூகத்துக்கு அறிவிச்சிடுவோம்..

1. காலையில ஆபிசுக்குள்ள நுழஞ்சதுல இருந்து மத்தியானம் சாப்பிட போற வரைக்கும் சீட்ட வுட்டு எந்திரிக்காதீங்க. டீ குடிக்க போனா கூட டீய எடுத்திக்கிட்டு சீட்டுக்கு வந்திடுங்க. அப்பத்தான் எல்லாரும் நம்ம பிசியா இருக்கறதா நினைப்பாங்க..

2. வெட்டியா யாரு கிட்டயும் போயி அரட்டை அடிக்க வேணாம் அதுவும் மேலாளர் கண்ணுல படர மாதிரி வேண்டவே வேண்டாம்.


3. ஏதாவது ஒரு ப்ரீ டெஸ்ட் இல்ல ஆபிசுல டிரெனிங் ஏதாவது வந்திச்சுன்னா முத ஆளா போய் நின்னிடுங்க.

4. புதுசா ஒரு டாபிக்க படிச்சிட்டு ஒரு டிரெயினிங் எடுங்க, முக்கியமா மறக்காம டீமுல இருக்கிற ஜூனியர் பசங்களா பார்த்து கூப்பிடுங்க (அவங்கதான், அதிகமா கேள்வி கேட்க மாட்டாங்க ) மறக்காம மேலாளர ஆப்ஷனல் அட்டென்டியா சேர்த்துடுங்க.

5. எல்லாருமே மறந்து போன பழைய பிரச்சினை எதாவது கண்டிப்பா எல்லா புராடக்லயும் இருக்கும், அத தேடி கண்டு பிடிச்சு முடிஞ்சா சரி பண்ணிட்டு நல்ல பேர தட்டிக்கிட்டு போயிடுங்க ( பிரச்சினைய சரி பண்ணினதுக்கு அப்புறம் எல்லோருக்கும் சொல்லுங்க முன்னாடியே சொல்லி தேவையில்லாத பிரச்சினையில மாட்டிக்காதிங்க!!! )

6. முதல்ல இருக்கிற கோட இம்ப்ரூவ் பண்ண எதாவது ஐடியா குடுங்க. பெர்பாமன்ச அதிகப்படுத்த முடியுமான்னு பாருங்க!!!

7. அதிகமா லீவு எடுக்காதிங்க, கடையில ஆளே இல்லையின்னாலும் டீ ஆத்தரது ரொம்ப முக்கியம்.

8. நம்ம புராஜெக்டுக்கு இன்டர்னல் வெப்சைட் பண்றது, பில்ட் டைய்ம குறைக்கறது இப்படி எதாவது நமக்கு நாமே ஆணிகளை ஏற்படுத்திக்க வேண்டியதுதான்.


9. அடிக்கடி மேலாளர் கிட்ட போய் அடுத்த வேல எப்ப வருதுன்னு கேட்டு , நமக்கு வேல இல்லன்னு ஞாபகப்படுத்தாதிங்க.

10. பெரிய தலை யாராவது வந்தா ஊர் கூட்டம (all hands meet, town hall meet,etc) போடுவாங்க இல்லையா ? அதுக்கு தவறாம போயிடுங்க!! அப்பதான் கப்பல் எப்ப மூழ்கப்போகுதுன்னு தெரியும்.


இதெல்லாம் ஒரு ஐடியாதான்.. இதுக்கெல்லாம் தேவையில்லாம கூடிய சீக்கிரம் எல்லாம் சரியாகி நிறைய ஆணி புடுங்கற வேல எல்லோருக்கும் கிடைக்கணும்னு ஆத்தாவ வேண்டிக்கிட்டு ஒரு குலவைய போடுங்க.. சீக்கிரமா கண்ணை தொற ஆத்தா !!!! உ லு லு லு லு !!!!!!




கொஞ்சம் காமெடியா எழுதலாம்னு ஆரம்பிச்சு கடைசியில சீரியசா ஆகிப்போச்சு எல்லாரும் மன்னிக்கணும்.

* பின் குறிப்பு :
உங்க மேலாளர் கிட்ட இந்த பதிவ காட்டிராதிங்க !!!



Thursday, March 12, 2009

இந்த கொடுமய நீயே பாரு சிவனே!!

நண்பர் ஒருத்தர் இந்த போட்டோவ அனுப்பியிருந்தாரு!!

இப்படிப்பட்ட
கொடுமைய கேட்க ஆளே இல்லையா?? மக்கா!!!!! இந்த வங்கொடுமய நீங்களே பாருங்க !! இந்த போஸ்டர வச்சவனுக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா??


























நமக்கே கொஞ்சம் ஓவரா இல்ல ?





தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் அடிக்கற கூத்து பத்தாதுன்னு நீங்க வேறயா?

Monday, March 9, 2009

அரசியல் யாவாரிக வாராங்க உஷாரய்யா உஷாரு !!



அரசியல் யாவாரிக வாராங்க உஷாரய்யா உஷாரு !!
(வரும் பாராளுமன்ற மற்றும் வரப்போகிற சட்டமன்ற தேர்தலுக்கும் சேர்த்து)

நம்ம தலைமை தேர்தல் ஆணையர் அய்யா தேர்தல் தேதி சொல்லிபோட்டாங்க. நம்ம ஊர் சனம் முச்சுடூம் ஊர் சாவடியில உட்கார்ந்து அத பத்தி பேச ஆரம்பிச்சுட்டாங்க. இனி கேட்டுங்கங்க!! ஊட்டுக்கு ஊடு பிளாஸ்டிக் கொடம்தான் கோழி பிரியாணிதான். ஆட்டோவில கொழாய் கட்டி "வாக்காளப்பெருங்குடி மக்களே!! உங்கள் பொன்னான வாக்குகளை டுபாக்கூர் சின்னத்துக்கே அளியுங்கள்" காது சவ்வ கிழிக்காம விடமாட்டாங்க. கொஞ்ச நாளைக்கு நம்ம ஊரு ஒரே அல்லோல கல்லோலப்படும்.

ஊர்ல இருக்கிற உப்புமா கட்சியெல்லாம் ஒரே படம் போடுவாங்க..எல்லாகட்சியும் எங்க கூட தொகுதி உடன்பாட்டுக்கு வரிசையில நிக்கிறாங்கஅப்படின்னு பத்தி பத்தியா பேட்டி குடுப்பாங்க. நம்ம கலைஞர் அய்யா "உடன்பிறப்பே " அப்படின்னு முரசொலியில கவிதை எழுத ஆரம்பிச்சுடுவாரு. நம்ம அம்மா புரட்சி தலைவிக்கு திடீருன்னு இலங்கை தமிழர் மேல கரிசனம் வரும் உண்ணா விரதம் எல்லாம் இருக்கப்போறாங்க!!. இம்புட்டு நாளுஅவங்களுக்கு செலெக்டிவ் அம்னீசியா பாவம் அவங்க என்ன பண்ணுவாங்க!!! விசயகாந்து கலைஞர் அய்யா ஆட்சிய இன்னும் அதிகமா விமர்சனம் பண்ணுவாரு. மருத்துவர் அய்யா, புரட்சி தலைவி சகோதரிய என்னிக்கி போயிபார்க்கலாம்னு நல்ல நாள் பார்க்க ஆரம்பிச்சிடுவாரு. வைகோ எத்தனைமேடையில அழுக போறாருன்னு தெரியல( பேசாம ஒரு டிவி ஆரம்பிச்சு மெகாசீரியல் பண்ண ஆரம்பிக்கலாம் டிஆர்பி ரேட்டிங் எகிருடும்கண்ணோவ்!!!)

திருமாவளவன்
அய்யா , கிருஷ்ணாசாமி அய்யா , சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரு எல்லோரும் யார் கடைக்கி போனா அதிக முட்டாய்( சீட்டு ) கிடைக்கும்னுகணக்கு போட ஆரம்பிச்சிருவாங்க. இதுக்கு நடுவுல கம்யூனிஸ்ட் தோழர்கள் கலங்காம காமெடி பண்ணுவாங்க. காங்கிரஸ் கட்சிய உட்டுபோட்டமோ?? அதுதான் குடுமிபுடி சண்டை தினமும் டீக்கடை பேப்பர்ல பார்க்கரமில்ல..அப்புறம் என்ன யாரு ஆட்சிக்கு வந்தாலும் அடுத்ததா காமராஜர் அட்சி அமைப்போம் அப்படின்னு ஒரு அறிக்கை விட்டு சத்யமூர்த்தி பவன வாஸ்து படி மாத்தினா காங்கிரஸ் புராணம் முடிஞ்சு போச்சு. எல்லா கட்சிகாரங்களும் ரயில , பிளேன புடிச்சு டெல்லிக்கு ஓடுவாங்க. அங்க போயி என்ன பேசுவாங்க யார் கால்லயெல்லாம் உழுவாங்ககிரதெல்லாம் ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

ராமாயண காலத்துல அனுமாரு இலங்கைக்கு ஒரே தாவா தாவி போனாருன்னு எங்க ஆத்தா கதை சொல்லும், அதெக்கெல்லாம் சவாலு உடர மாதிரி எத்தனை கட்சி தலைவருங்க கோபாலபுரத்துக்கும், போயஸ் தோட்டத்துக்கும், தைலாபுரத்துக்கும் தாவ போறங்கன்னு தெரியலிங்க!! இன்னும் நடக்க போற கூத்தெல்லாம் போன தேர்தல்ல பார்த்ததை தூக்கி சாப்பிடற மாதிரித்தான் இருக்கும்.

எல்லா கட்சி தலைவர்களுக்கும் ஒரு விண்ணப்பம்ங்க,

ஏஞ்சாமி?? சீரியல் லைட்டுக்கும், டூப் லைட்டுக்கும் எங்கிருந்து கரண்டு எடுக்கரிங்க அத கொஞ்சம் எங்க ஊருப்பக்கம் கொடுத்தா, எங்க புள்ளைகளும் ரெண்டு பரீட்சைக்கு படிக்கும், உங்களுக்கும் புண்ணியமா போகும். கட்அவுட்டுக்கு செலவு பண்ற காச வேலையில்லாத பட்டதாரிகளுக்கு கோழிப்பண்ணை வச்சு குடுக்கலாம்ல..

இலவசமா எல்லாத்தையும் கொடுத்து எங்கள பிச்சக்காரன் மாதிரிஆக்கிப்போட்டிங்க. டிவி பொட்டி , எரிவாயு அடுப்பு , வேலையில்லாதவனுக்கு
உதவித்தொகை, இன்னும் எதுக்கெல்லாமோ உதவித்தொகை..( கணக்குதெரியலிங்க!!!).. இலவசமாவே எல்லாம் கெடச்சா யாருக்குதாங்க உழைக்க மனசு வரும். இப்படி இலவசமா பல பொருட்கள கொடுத்த காசுக்கு தொழில வளர்த்திருக்கலாம் , விவசாயத்த வளர்த்திருக்கலாம்.. இந்த தடவையாவது உருப்படியா சில திட்டங்கள போடுங்கய்யா!!!

அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும்னு, யாரு ஆட்சிக்குவந்தாலும் முதல்ல செய்யிற வேல , முந்தின ஆட்சியில போட்ட திட்டத்தயெல்லாம் நிறுத்தரதுதான்.. முன்னால் முதல்வர செயில்ல போடறது. இப்படிஉங்களுக்கு பழி வாங்கற படலம் முடியரதுக்கே அஞ்சு வருசம்சரியாப்போயிடுது.. அப்புறம் எங்க மக்களுக்கு நலத்திட்டம் எல்லாம் போடறது, செயல்படுத்தறது. இதெயெல்லாம் கொஞ்சம் மாத்திக்க முடியுமா உங்களால??

உங்களோட மகன் மகளுக்கு எம்பி சீட்டு அப்படியே மந்திரி பதவி.. எத்தனை தடவ கூட்டணி மாறினாலும் அசராம, காலையில பாராட்டுன கட்சிய , சாயங்காலமே திட்டறது.. எப்படி உங்களால மட்டும் முடியுது. "தங்கத்தலைவர் வாழுக!!" அப்படின்னு தொண்டை கிழிய கோஷம் போடற அடிமட்டத் தொண்டனையும் கொஞ்சம் மதிங்க. மத்தவங்களையும் வாழ விடுங்க.

அப்துல் கலாம் வந்தாருன்னா இந்தியா மிளிரும் அப்படின்னு ஒரு மேடையிலபேசிட்டு , புறகாண்டியே அவருக்கு எதிரா ஒட்டு போட்டு அவர தோக்க வச்சவங்க தானே நீங்க.

தேர்தல் பார்லிமெண்டுக்கா இல்ல சட்டமன்றத்துக்கான்னு தெரியாமயே ஒட்டு போடற ஆளுங்க இன்னும் நிறைய இருக்காங்க. இன்னும் இந்திரா காந்தி கட்சிக்கும், எம்சியார் கட்சிக்கு மாத்திரம்தான் ஒட்டு போடற ஆளுங்களும் இருக்காங்க. இவங்களுக்கு நீங்க என்ன செஞ்சிங்க? இன்னும் என்ன செய்ய போறீங்க?

இப்படி எத்தனை புலம்புனாலும் , ஒரு தேர்தல் விடாம குடுக்கற பிரியாணிய தின்னுப்புட்டு ஒட்டு போடற இந்த வாக்காளன் ரொம்ப நல்லவன்னு ஏமாத்திக்கிட்டே இருக்கலாம்னு நினைச்சி போடதிங்க!!! ஒரு தடவ அம்மாஅடுத்த தடவ அய்யா இப்படி மாத்தி மாத்தி ஆட்சியில உட்கார வச்சிக்கிட்டே இருக்கானே இவன எப்படி ஏமாத்தினாலும் தாங்கறானே அப்படின்னு முளகாய் அரச்சிக்கிட்டே இருக்கிங்களே ?? மனசாட்சியே இல்லையா உங்களுக்கெல்லாம் ?? ஒரு நாளக்கி இவங்க முழிச்சிக்கிட்டா நீங்க என்ன ஆவிங்கன்னு நீங்களே நினச்சி பார்த்துக்கோங்க!!!


வாக்காளப்பெருங்குடி மக்களுக்கு ஒரு விண்ணப்பம்ங்க

அமெரிக்காவில யாரோ ஒபாமா அப்படின்னு ஒருத்தரு மாற்றம் தரேன்னு சொல்லி செயிச்சு சனாதிபதி ஆயிட்டராமே ? அவரு மாதிரி எங்களுக்கு ஒரு தலைவரு எப்போ வருவாரோன்னு பாத்து பாத்து கண்ணு பூத்து போச்சி !!!

அய்யா வாக்காளப்பெருங்குடி மக்களே!! இந்த தடவையாவது ஒரு மாற்றத்தைகுடுங்கன்னு எங்க ஊர் சார்பாவும் மத்த எல்லா மக்கள் சார்பாவும் கேட்டுக்குறேன்.
எரியற கொள்ளியில எந்தகொள்ளி நல்ல கொள்ளி அப்படின்னு கேட்கறிங்களா?? அது தெரிஞ்சா நம்ம தலையெழுத்து ஏன் இப்படி இருக்குது?

Thursday, March 5, 2009

வீரப்பன் ஆவி

மலையோர கிராமமான கொண்டேஹள்ளியில் அன்றைய பொழுது மிகவும் நிதானமாக விடிந்து கொண்டிருந்தது. சரசுவின் கணவன் முந்திய இரவு குடித்த டாஸ்மாக் சரக்கின் வீரியம் இன்னும் குறையாமல் உருண்டு கொண்டிருந்தான். கருக்கலிலேயே எழுந்து கொண்டவள் வெளியே வந்து ஆடுகளை வாஞ்சையோடு பார்த்தாள். மதிய வெயில் உச்சிக்கு வரும் முன்னால் ஆடுகளை காட்டுக்குள் மேய்க்க அழைத்து செல்ல வேண்டும். காட்டு இலாக்கா முன்னே மாதிரி இல்லை. வீரப்பன் இருந்த வரைக்கும் காட்டுக்குள் செல்ல அதிகாரிகள் எல்லோரும் பயப்படுவார்கள் அது சரசு மாதிரி ஆட்களுக்கு வசதியாக இருந்தது. இப்போ கெடுபிடி அதிகமாகி விட்டது.

அதுவும் புதுசாய் வந்திருக்கிற அதிகாரி ஒரு மாதிரி என்று பேச்சு வேறு. நினைக்கையிலேயே பயம் அப்பி கொண்டது மனதில். இவர்கள் ஒரு பக்கம் என்றால் வீரப்பன் புதையல் தேடும் கூட்டம் ஒரு பக்கம். ஆக காட்டுக்குள் ஒரு கட்டுப்பாடு என்பதே இல்லாமல் போய் விட்டது. மனதை திடப்படித்திக்கொண்டு கூழை கரைத்து குடித்தாள். " தே!! எந்திருச்சு கூழை குடி வெறும் வயத்தோட படுத்திருக்காதே !!" என்று கணவனை பார்த்து கத்திவிட்டு காட்டை நோக்கி புறப்பட்டாள்.

யோசித்துக்கொண்டே நடந்தவள் வெகு தூரம் காட்டுக்குள் வந்து விட்டதை உணரவில்லை. ஆடுகளை குச்சியால் விரட்டிக்கொண்டே சென்றவள் திடீரென நின்றாள். அவள் முன்னே காட்டு இலாகா ஜீப் நின்று கொண்டிருந்தது. பயத்தோடு தலையை கீழே போட்டுக்கொண்டு ஒரு ஓரமாக நடக்க ஆரம்பித்தாள். ஜீப்பிலிருந்து ஒரு காக்கி சட்டை இறங்கியது .. " ஏய்!! எங்கே போறே??" குரலில் ஒரு அதிகாரம், ஆணவம் தெறித்தது.. "சார்!! ஆடு மேய்க்க காட்டுக்குள்ள போறேன்". "காட்டுக்குள்ள ஆடு மேய்க்க அனுமதி இல்லன்னு உனக்கு தெரியாதா? சரி சரி ஜீப்ல பெட்ரோல் தீர்ந்து போச்சு டிரைவர் பெட்ரோல் வாங்கிட்டு வர போயிருக்கான். அது வரைக்கும் இப்படி வந்து என்கூட உட்கார்ந்து பேசிக்கிட்டு இரு". சரசுவின் மனது இவனை எப்படி சமாளிப்பது என்று கணக்கு போட ஆரம்பித்தது.

அவனோ அவளது விலகியிருந்த சேலையை வெறிக்க ஆரம்பித்தான். " என்ன யோசனை உன்னோட பேரு என்ன?" காக்கி சட்டை கேட்டது. "சரசு" என்று சொன்ன்னபடியே அருகில் வந்த அவளை கண்ணால் அளக்க ஆரம்பித்தான்.
"டிரைவர் வர இன்னும் நேரமாகும் அது வரைக்கும் நாம கொஞ்சம் சந்தோசமா இருக்கலாம் என்ன " என்று அவள் கையை எட்டி பிடித்தான். கையை உதரியவள் பயத்தில் பேச்சு வராமல் அப்படியே நின்றாள். அவன் கைகள் முன்னேறி அவள் சேலையை பற்றின.

"டேய் !! போலிசு !! அவ கைய உடரா!!" எங்கிருந்தோ ஒரு குரல் காற்றில் வந்தது. " யாருடா நீ பொட்ட பய என் முன்னாடி வாடா!!" காக்கி சட்டை உறுமியது. "எத்தன போலீச போட்டாலும் திருந்தவே மாட்டிங்களாடா ??" குரல் இன்னும் காட்டமானது. காக்கி சட்டைக்கு அந்த குரலை எங்கோ கேட்ட மாதிரி இருந்தது. குரல் மீண்டும் தொடர்ந்தது. "நான் இருக்கிற வரைக்கும் இந்த காட்டுல எந்த அநியாயமும் நடக்க விட மாட்டேன் நான்தாண்டா வீரப்பன்!!!!!" திடீரென்று பறவைகள் சிதறி படபடத்து பறந்தன. காற்றின் வேகமும் அதிகமாகியது. இப்போது காக்கி சட்டை நிஜமாகவே பயந்து விட்டது. நாக்கு வறண்டு " ஏய் யாரது ??" குரல் வெளியே வரவே இல்லை...

"நீயெல்லாம் சொன்னா கேட்க மாட்டேடா போலிசு உன்னை புடிச்சு தோல உரிச்சாதான் சரி வருவே " எங்கோ ஒரு ஆந்தை பகலில் கத்தியது.. காக்கி சட்டையின் பிடி சற்று தளர்ந்தது. சரசு இறந்தும் காக்கும் வீரப்பனுக்கு நன்றி சொல்லிவிட்டு ஆடுகளை இழுத்துக்கொண்டு ஓடி மறைந்தாள்.

காக்கி சட்டையும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு காட்டு இலாகா ஆபீஸ் நோக்கி ஓடியது. அறைக்குள் நுழைந்து இருந்த தண்ணீரை மடக்கில் காலி செய்தது. நாற்காலியில் அப்படியே சரிந்தது, வியர்வையில் சட்டை உடலோடு ஒட்டிப்போயிருந்தது. சிறிது நேரம் கழித்து வெளியே ஜீப் சத்தம் கேட்டது. உள்ளே நுழைந்த டிரைவர் மணி "சார் எங்கே போனிங்க?? ஜீப் கிட்ட உங்கள காணல எல்லா பக்கமும் தேடி பார்த்துட்டு இங்கே வந்தேன்" அவன் முடிக்கு முன்பே "எங்கேய்யா பொய் தொலைஞ்சே!!. நீ வரதுக்குள்ளே என்னமோ நடந்து போச்சு" என்று மூச்சு விடாமல் கதையை சொல்லி நிறுத்தியது காக்கி சட்டை."சார் ஊருக்குள்ளேயும் வீரப்பன் ஆவி அங்கதான் சுத்திகிட்டு இருக்கு அப்படின்னு பேசிக்கிறாங்க, இனிமே எதுக்கும் கவனமா இருங்க" என்றான் மணி.

சரசுவின் வீட்டிலும் ஒரே களேபரமாய் இருந்தது. கணவனிடம் நடந்த அனைத்தையும் ஒப்பித்தாள். "வீரப்பன் சாமி நம்மள காப்பாத்திருச்சு எதுக்கும் அவரு சமாதிக்கு ஒரு தடவ போய் கும்பிட்டுட்டு வந்திருவோம்" என்றான் சரசுவின் கணவன்.

டிரைவர் மணி பணி முடிந்து வீட்டுக்கு வந்தான், அவனுடைய வீட்டு அலமாரியில் வரிசையை கோப்பைகள். அவை எல்லாவற்றிலும் ஒன்றே எழுதியிருந்தது "பல குரல் கலைஞர்" மணியின் மிமிக்ரி திறமைகள் புதுசாய் வந்திருக்கும் காக்கி சட்டைக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. மணியின் இதழோரம் ஒரு புன்னகை பூத்தது.