Thursday, December 11, 2008

மொட்டை போடலியோ மொட்டை

பழைய கவிதைய தூசு தட்டி எடுக்கிறேன் பேர்வழின்னு சீரியசா ஆணி புடுங்கறியே ?? என்ன கவிஞர் வைரமுத்துவுக்கு டஃப் பைட்டு குடுக்கிறியா??
பிச்சுபுடுவேன் படவா !! (கொஞ்சம் ஓவரா பிட்ட போடரமோ ....!! ??) அப்படின்னு நம்ம மனசாட்சி கவுண்டபெல் வாய்சுல கன்னா பின்னான்னு திட்டுச்சு..


சரி நமக்கு பிளாக் எழுதரதுல முன் மாதிரின்னு பார்த்தா நம்ம இளவஞ்சி தான்..(http://ilavanji.blogspot.com/) அவரு நமக்கு துரோணர் மாதிரி என்னை அவருக்கு தெரியாது ஆனா அவரோட பிளாக்குக்கு நான் ரசிகன் (அப்ப நீ ஏகலைவனா?? நீயெல்லாம் அடங்கவே மாட்டியா ??) .


சரி நம்மளும் கொஞ்சம் காமெடியா எழுதுவோமே அப்படின்னு அவர பார்த்து சூடு போட்டுக்கிட்டதுதான் இந்த மொட்டை (மொக்கை).


எத பத்தி எழுதலாம் அப்படின்னு உட்கார்ந்து யோசிச்சப்ப ஒன்னு விளங்குச்சு.. ஒண்ணுமே உதிக்கல. கற்பனை குதிர நகர மாட்டேன்னு அடம் புடிக்குது உனக்கு வயசாகி போச்சுடா விவேக்கா!!! அப்படின்னு மைண்ட் வாய்ஸ்ல யாரோ பேசற மாதிரியே இருந்துச்சு....(நம்ம வீட்டம்மாவா இருக்குமோ!!) அப்படி எல்லாம் ஒன்னும் இல்லடா மாப்பிள்ளை உன்னால முடியும்டான்னு தேத்திகிட்டு நம்ம யாழினி பாப்பாக்கு ஊர்ல மொட்ட போட்டத படக்கதயா எழுதிட்டேன்.


பதினோரு மாசத்தில குல தெய்வத்துக்கு மொட்டை போட்டே ஆகணும்டா இல்லன்னா தெய்வ குத்தம் ஆகி போயிடும்டோவ் !! அம்மா ஊதற சங்க ஊதிருச்சு அப்புறமும் சும்மா இருந்த அவ்வளவுதான்..


அடுத்தது எங்க மொட்ட போடறது, ரெண்டு குல தெய்வ கோவில் இருந்தாலே வில்லங்கம் தான் !! ஒரு வழியா கட்டி உருண்டு முடிவுக்கு வந்தாச்சு. மதுக்கம்பாளையத்தில இருக்கிற சாமிக்கே மொட்டய போட்டுடலாம் , வேணும்னா இந்த சாமி போய் உடுமலைபேட்டயில இருக்கிற சாமிகிட்ட சிபாரிசு பண்ணிக்கட்டும்.


யார எல்லாம் கூப்பிடறதுன்னு ஒரு லிஸ்ட் போட்டா!!!! நம்ம சொந்தம் பெரிசு இவங்கள விட்டா அவங்களுக்கு கோபம் வரும் அவங்கள விட்டா இவங்களுக்கு கோபம் வரும் ( அப்பா இப்பவே கண்ணை கட்டுதே!!) ஒரு வழியா அதையும் சமாளிச்சு ஒரு அம்பது பேர கூப்பிட்டு மொட்டைய போட்ரலாம்னு மாமா முடிவு பண்ணினாரு.. அப்பாடா ஒரு வழியா பிரச்சினை முடிவுக்கு வந்திருச்சு...


இது தான் மதுக்கம்பாளையம் ... ஒரு பெரிய வீடு தெரியுதா?? அத பார்த்து வச்சிக்கங்க அதுக்கொரு கதை இருக்குது சாமி!!! அத இன்னொரு பிளாக்குல எழுதறேன்...



குலதெய்வத்த பய பக்தியா கும்பிட்டாச்சு ....



பாப்பா உன்னோட அழகான முடி இன்னும் கொஞ்ச நேரத்துல காணாம போக போகுதே.....



எனக்கு மொட்டை போட போறிங்களா ???



ஊர்வலமா கிளம்பியாச்சு ஆத்தங்கரைக்கு....



மொட்டைய போடுங்க ....



ஹும்ம் நமக்கும் சின்ன வயசுல இப்படித்தான் மொட்டைய போட்டாங்களோ ??




பஸ்க்கு காத்திருந்த நேரத்துல நம்ம புகைப்பட திறமைய வெளிப்படுத்தலாமேன்னு ஹி!! ஹி!! ஹி!!




ஆமா இவரு பெரிய ஒளி ஓவியரு !! மிளகாய் செடிய கூட விட மாட்டாரு !! இது என் வீட்டம்மாவோட கமெண்ட்டு



அப்பாடா வேல முடிஞ்சுது இன்னிக்கு நைட்டே ரயில புடிச்சு பெங்களூர பார்க்க போக வேண்டியதுதான்..

கடைசில வச்சாங்க பாருங்க ஆப்பு " ஏனுங்க மாப்பிள்ளை !!!! உடுமலபேட்டயில வச்சு மொட்ட அடிச்சா கெடா வெட்டணும்னு இங்க வச்சு சைவ சாப்பாடு போட்டுட்டிங்களே "!!!!!!

கவுண்டபெல் காலத்திலிருந்து நீங்கல்லாம் மாறவே இல்லியா?? "ஏங்க காது குத்தியாச்சா கெடாய எப்பங்க வெட்டுவாங்க" :-)

கிடாய வெட்டிட்டு காது குத்துவாங்களா?? காத குத்திட்டு கிடாய வெட்டுவாங்களா??

Wednesday, December 10, 2008

ஊமைப்பாசம்

வீட்டு வாசல் அருகே

ஒரு தளிர்

முளை விட்டிருந்தது





யாரோ வந்தவர் சொன்னார்

தானாய் வீட்டுக்கு

முன்னாடி மரம் முளைச்சா நல்லதுங்க

சிறு தளிர் தென்றலின்

அலைப்பில் சிரித்தது

வேலி கட்டி பாதுகாக்கையில்

நீருடன் இரத்தமும்

ஊற்ற வைத்தன முட்கள்

வளர்ந்தது என் மகளுடன்

ஊஞ்சல் கட்டி ஆடுகையில்

ஒரு கிளை ஒடிந்தது என்று

அவளை அடித்ததற்கு

என்னை ஒரு மாதிரியாய்

பார்த்தனர் என் வீட்டில்

பூத்து குலுங்கியது

அதுவும்

சிறிதாய் பெரிதாய்

பஞ்சில் நாரில்

விதவிதமாய் கூடுகள்

கருப்பாய் சிவப்பாய்

இரண்டும் கலந்த மாதிரி

பெயர் தெரியாத பறவைகள்

தினமும் கூடுகளில்

குடும்பச் சண்டை என் வீடு போல்

அவங்களை பாரு நாமே தேவலாம்

சிரித்திருக்குமோ ......???

நிழலில் நாற்காலியிட்டு

பேனா பிடிக்கையில்

சிறகு முளைத்தது எனக்கு

ஆத்மார்த்தமாய்

அதனுடன் ஒன்றிப்போனேன்

வெளியூர் சென்று

இரண்டு வாரம் கழித்துவருகையில்

வாடியிருப்பது போல் பட்டது



ஒரு முறை புயலில்

பேயாய்க்காற்று அலைக்கழிக்கையில்

ஜன்னலின் வழியே பார்த்தேன்

விழி ஓரம் நீர் ததும்பியது

கொஞ்ச நாள் கழித்து

அலுவலகத்திலிருந்து வந்து பார்த்த போது

இடம் வெறுமையாய்

மின்துறையின் கைங்கர்யம்

வெள்ளை வெள்ளையாய்

துகள்கள் மட்டும் சதை துணுக்குகளாய்

எவ்வளவு வலித்திருக்கும்

பறவைகளை காணவில்லை

நால்வரின் பசியால்

கூடின்றி அலைந்தன அனைத்தும்

கூடவே என் மனமும்.......

Tuesday, December 9, 2008

சங்கீதம்



பூக்களின் மீது
வண்டு சுற்றும் ரீங்காரம்
மூங்கிலின் ஊடே காற்று

புகுந்து வரும் சங்கீதம்

மனம் புகுந்து எண்ணங்கள்
வருடும் புல்லாங்குழல் இசை
நரம்புகளில் சுரங்கள் மீட்டி
ஆனந்த சுதி கூட்டும் யாழிசை

நிலாக்கலங்களில் என் காதருகே
கதை பேசும் பூங்காற்று
சிற்றோடைகளாய் சலசலத்து மலைகளிலிருந்து
வீழ்ந்து பயமுறுத்தும் நீருற்று

இயற்கையின் விசித்திரங்கள்
சங்கீதமாக பட்டது
"அம்மா" முதல் மழலைச்சொல்
வந்து உயிர் தொடும் வரை........!!!!!





Monday, December 8, 2008

ஹைகூ கவிதைகள்


கனவு

காலையில் தொலைத்த

இரவின் எச்சம் .....!



மண்ணின் மைந்தர்கள்

ஒட்டிய வயிறு

ஒடுங்கிய கண்கள்

கனவுகள் அதிலே

இவர்கள்

விதி வந்தும் சாகாதவர்கள்....!



சாலையோர மரங்கள்

நாங்கள்

சாலை காவலர்கள்

எங்களுக்கும்

அடையாள எண்கள்......!

நிலவு

வெள்ளுடை தரித்த

இரவு விதவை ......!

சிறை

நான்கு சுவர்களுக்குள்

மனங்களுக்கு அல்ல .....