Wednesday, December 10, 2008

ஊமைப்பாசம்

வீட்டு வாசல் அருகே

ஒரு தளிர்

முளை விட்டிருந்தது





யாரோ வந்தவர் சொன்னார்

தானாய் வீட்டுக்கு

முன்னாடி மரம் முளைச்சா நல்லதுங்க

சிறு தளிர் தென்றலின்

அலைப்பில் சிரித்தது

வேலி கட்டி பாதுகாக்கையில்

நீருடன் இரத்தமும்

ஊற்ற வைத்தன முட்கள்

வளர்ந்தது என் மகளுடன்

ஊஞ்சல் கட்டி ஆடுகையில்

ஒரு கிளை ஒடிந்தது என்று

அவளை அடித்ததற்கு

என்னை ஒரு மாதிரியாய்

பார்த்தனர் என் வீட்டில்

பூத்து குலுங்கியது

அதுவும்

சிறிதாய் பெரிதாய்

பஞ்சில் நாரில்

விதவிதமாய் கூடுகள்

கருப்பாய் சிவப்பாய்

இரண்டும் கலந்த மாதிரி

பெயர் தெரியாத பறவைகள்

தினமும் கூடுகளில்

குடும்பச் சண்டை என் வீடு போல்

அவங்களை பாரு நாமே தேவலாம்

சிரித்திருக்குமோ ......???

நிழலில் நாற்காலியிட்டு

பேனா பிடிக்கையில்

சிறகு முளைத்தது எனக்கு

ஆத்மார்த்தமாய்

அதனுடன் ஒன்றிப்போனேன்

வெளியூர் சென்று

இரண்டு வாரம் கழித்துவருகையில்

வாடியிருப்பது போல் பட்டது



ஒரு முறை புயலில்

பேயாய்க்காற்று அலைக்கழிக்கையில்

ஜன்னலின் வழியே பார்த்தேன்

விழி ஓரம் நீர் ததும்பியது

கொஞ்ச நாள் கழித்து

அலுவலகத்திலிருந்து வந்து பார்த்த போது

இடம் வெறுமையாய்

மின்துறையின் கைங்கர்யம்

வெள்ளை வெள்ளையாய்

துகள்கள் மட்டும் சதை துணுக்குகளாய்

எவ்வளவு வலித்திருக்கும்

பறவைகளை காணவில்லை

நால்வரின் பசியால்

கூடின்றி அலைந்தன அனைத்தும்

கூடவே என் மனமும்.......

No comments: