Thursday, March 5, 2009

வீரப்பன் ஆவி

மலையோர கிராமமான கொண்டேஹள்ளியில் அன்றைய பொழுது மிகவும் நிதானமாக விடிந்து கொண்டிருந்தது. சரசுவின் கணவன் முந்திய இரவு குடித்த டாஸ்மாக் சரக்கின் வீரியம் இன்னும் குறையாமல் உருண்டு கொண்டிருந்தான். கருக்கலிலேயே எழுந்து கொண்டவள் வெளியே வந்து ஆடுகளை வாஞ்சையோடு பார்த்தாள். மதிய வெயில் உச்சிக்கு வரும் முன்னால் ஆடுகளை காட்டுக்குள் மேய்க்க அழைத்து செல்ல வேண்டும். காட்டு இலாக்கா முன்னே மாதிரி இல்லை. வீரப்பன் இருந்த வரைக்கும் காட்டுக்குள் செல்ல அதிகாரிகள் எல்லோரும் பயப்படுவார்கள் அது சரசு மாதிரி ஆட்களுக்கு வசதியாக இருந்தது. இப்போ கெடுபிடி அதிகமாகி விட்டது.

அதுவும் புதுசாய் வந்திருக்கிற அதிகாரி ஒரு மாதிரி என்று பேச்சு வேறு. நினைக்கையிலேயே பயம் அப்பி கொண்டது மனதில். இவர்கள் ஒரு பக்கம் என்றால் வீரப்பன் புதையல் தேடும் கூட்டம் ஒரு பக்கம். ஆக காட்டுக்குள் ஒரு கட்டுப்பாடு என்பதே இல்லாமல் போய் விட்டது. மனதை திடப்படித்திக்கொண்டு கூழை கரைத்து குடித்தாள். " தே!! எந்திருச்சு கூழை குடி வெறும் வயத்தோட படுத்திருக்காதே !!" என்று கணவனை பார்த்து கத்திவிட்டு காட்டை நோக்கி புறப்பட்டாள்.

யோசித்துக்கொண்டே நடந்தவள் வெகு தூரம் காட்டுக்குள் வந்து விட்டதை உணரவில்லை. ஆடுகளை குச்சியால் விரட்டிக்கொண்டே சென்றவள் திடீரென நின்றாள். அவள் முன்னே காட்டு இலாகா ஜீப் நின்று கொண்டிருந்தது. பயத்தோடு தலையை கீழே போட்டுக்கொண்டு ஒரு ஓரமாக நடக்க ஆரம்பித்தாள். ஜீப்பிலிருந்து ஒரு காக்கி சட்டை இறங்கியது .. " ஏய்!! எங்கே போறே??" குரலில் ஒரு அதிகாரம், ஆணவம் தெறித்தது.. "சார்!! ஆடு மேய்க்க காட்டுக்குள்ள போறேன்". "காட்டுக்குள்ள ஆடு மேய்க்க அனுமதி இல்லன்னு உனக்கு தெரியாதா? சரி சரி ஜீப்ல பெட்ரோல் தீர்ந்து போச்சு டிரைவர் பெட்ரோல் வாங்கிட்டு வர போயிருக்கான். அது வரைக்கும் இப்படி வந்து என்கூட உட்கார்ந்து பேசிக்கிட்டு இரு". சரசுவின் மனது இவனை எப்படி சமாளிப்பது என்று கணக்கு போட ஆரம்பித்தது.

அவனோ அவளது விலகியிருந்த சேலையை வெறிக்க ஆரம்பித்தான். " என்ன யோசனை உன்னோட பேரு என்ன?" காக்கி சட்டை கேட்டது. "சரசு" என்று சொன்ன்னபடியே அருகில் வந்த அவளை கண்ணால் அளக்க ஆரம்பித்தான்.
"டிரைவர் வர இன்னும் நேரமாகும் அது வரைக்கும் நாம கொஞ்சம் சந்தோசமா இருக்கலாம் என்ன " என்று அவள் கையை எட்டி பிடித்தான். கையை உதரியவள் பயத்தில் பேச்சு வராமல் அப்படியே நின்றாள். அவன் கைகள் முன்னேறி அவள் சேலையை பற்றின.

"டேய் !! போலிசு !! அவ கைய உடரா!!" எங்கிருந்தோ ஒரு குரல் காற்றில் வந்தது. " யாருடா நீ பொட்ட பய என் முன்னாடி வாடா!!" காக்கி சட்டை உறுமியது. "எத்தன போலீச போட்டாலும் திருந்தவே மாட்டிங்களாடா ??" குரல் இன்னும் காட்டமானது. காக்கி சட்டைக்கு அந்த குரலை எங்கோ கேட்ட மாதிரி இருந்தது. குரல் மீண்டும் தொடர்ந்தது. "நான் இருக்கிற வரைக்கும் இந்த காட்டுல எந்த அநியாயமும் நடக்க விட மாட்டேன் நான்தாண்டா வீரப்பன்!!!!!" திடீரென்று பறவைகள் சிதறி படபடத்து பறந்தன. காற்றின் வேகமும் அதிகமாகியது. இப்போது காக்கி சட்டை நிஜமாகவே பயந்து விட்டது. நாக்கு வறண்டு " ஏய் யாரது ??" குரல் வெளியே வரவே இல்லை...

"நீயெல்லாம் சொன்னா கேட்க மாட்டேடா போலிசு உன்னை புடிச்சு தோல உரிச்சாதான் சரி வருவே " எங்கோ ஒரு ஆந்தை பகலில் கத்தியது.. காக்கி சட்டையின் பிடி சற்று தளர்ந்தது. சரசு இறந்தும் காக்கும் வீரப்பனுக்கு நன்றி சொல்லிவிட்டு ஆடுகளை இழுத்துக்கொண்டு ஓடி மறைந்தாள்.

காக்கி சட்டையும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு காட்டு இலாகா ஆபீஸ் நோக்கி ஓடியது. அறைக்குள் நுழைந்து இருந்த தண்ணீரை மடக்கில் காலி செய்தது. நாற்காலியில் அப்படியே சரிந்தது, வியர்வையில் சட்டை உடலோடு ஒட்டிப்போயிருந்தது. சிறிது நேரம் கழித்து வெளியே ஜீப் சத்தம் கேட்டது. உள்ளே நுழைந்த டிரைவர் மணி "சார் எங்கே போனிங்க?? ஜீப் கிட்ட உங்கள காணல எல்லா பக்கமும் தேடி பார்த்துட்டு இங்கே வந்தேன்" அவன் முடிக்கு முன்பே "எங்கேய்யா பொய் தொலைஞ்சே!!. நீ வரதுக்குள்ளே என்னமோ நடந்து போச்சு" என்று மூச்சு விடாமல் கதையை சொல்லி நிறுத்தியது காக்கி சட்டை."சார் ஊருக்குள்ளேயும் வீரப்பன் ஆவி அங்கதான் சுத்திகிட்டு இருக்கு அப்படின்னு பேசிக்கிறாங்க, இனிமே எதுக்கும் கவனமா இருங்க" என்றான் மணி.

சரசுவின் வீட்டிலும் ஒரே களேபரமாய் இருந்தது. கணவனிடம் நடந்த அனைத்தையும் ஒப்பித்தாள். "வீரப்பன் சாமி நம்மள காப்பாத்திருச்சு எதுக்கும் அவரு சமாதிக்கு ஒரு தடவ போய் கும்பிட்டுட்டு வந்திருவோம்" என்றான் சரசுவின் கணவன்.

டிரைவர் மணி பணி முடிந்து வீட்டுக்கு வந்தான், அவனுடைய வீட்டு அலமாரியில் வரிசையை கோப்பைகள். அவை எல்லாவற்றிலும் ஒன்றே எழுதியிருந்தது "பல குரல் கலைஞர்" மணியின் மிமிக்ரி திறமைகள் புதுசாய் வந்திருக்கும் காக்கி சட்டைக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. மணியின் இதழோரம் ஒரு புன்னகை பூத்தது.

4 comments:

ஆதவா said...

நல்லா இருக்குங்க.... வீரப்பன் ஆவி!!

சந்தனமுல்லை said...

நல்லா இருக்கு கதை!

விவேக் said...

நன்றி ஆதவா!
தோழரே! இது என் முதல் முயற்சி

விவேக் said...

நன்றி தோழி ! சந்தன முல்லை